மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: அவல் கிடைத்த மகிழ்ச்சியில் குடியரசு கட்சி

வில்மிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பிடென் பதவியேற்க உள்ள நிலையில், அவரது மகன் ஹண்டர் பிடெனின் நிதி விவகாரங்கள் குறித்து நீதி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது, பிடெனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென், அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். ஏற்கனவே, தற்போதைய அதிபர் டிரம்ப், இவருடைய தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்து பதவியேற்பதை சிக்கலாக்கினார். அந்த பிரச்னை ஓய்ந்த நிலையில், பிடெனுக்கு புது சோதனை அவரது மகன் மூலம் வந்துள்ளது. பிடெனின் மகன் உக்ரைன், சீனாவில் வணிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதற்கு துணை அதிபராக இருந்த பிடென் உதவியதாகவும், அந்த பழக்கத்தை பயன்படுத்தி அதிபர் தேர்தலில் உதவ அந்நிய நாடுகளை அவர் அணுகியதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இப்போது பிடென் மகன் ஹண்டர் பிடெனின் சீன, உக்ரைன் வணிக நடவடிக்கைகள் தொடர்பாக நீதி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிடெனுக்கு அழுத்தம் கொடுக்க, கொரோனா பரவல் உட்பட அடுத்தடுத்த பல முக்கிய விவகாரங்கள் கிடைத்து வருவதால், டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் சந்தோஷத்தில் உள்ளனர்.

டிரம்ப்பின் திடீர் கொலை வெறி

கடந்த 130 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில், பதவியை விட்டு போகும் நேரத்தில்கூட மரண தண்டனையை நிறைவேற்றிய ஒரே நிர்வாகம் என்ற அவப்பெயரை பெற்றுள்ளது டிரம்ப் நிர்வாகம். இண்டியானா மாகாணத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெர்னார்ட் என்ற 40 வயது நபரின் மரண தண்டனை ஊசி மூலம் நிறைவேற்றப்பட்டது. இவர் 18 வயதாக இருக்கும் போது 2 பாதிரியார்களை கொன்ற வழக்கில் கைதானார். இந்த ஆண்டில் மட்டும் 9 பேரின் மரண தண்டனையை டிரம்ப் நிர்வாகம் நிறைவேற்றி உள்ளது. தனது பதவிக்காலம் முடியும் முன்பாக மேலும் 3 மரண தண்டனைகளை நிறைவேற்றும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கிறார்.

Related Stories: