ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் பயணிகள் நிழற்கூடத்தில் குப்பைகள் அகற்றம்

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட தொன்போஸ்கோ நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என இல்லாமல் குப்பை கொட்டும் இடமாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்குமிடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை ஜோலார்பேட்டை பிடிஓக்கள் பிரேம்குமார்(வட்டார ஊராட்சி), சங்கர் (கிராம ஊராட்சி) ஆகியோர் உத்தரவின்பேரில் ஊராட்சி செயலாளர் பெருமாள் தலைமையில் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பை கூடாரமாக  மாறி இருந்த பயணிகள் நிழற்கூடத்திற்கு சென்றனர். அங்கு அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து திருப்பத்தூரில் உள்ள மனநல காப்பகத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றினர். பின்னர் நிழற்கூடத்தில் இருந்த குப்பை, துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தீயிட்டு எரித்தனர். பின்னர் நிழற்கூடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.இதனால் பல மாதங்களாக பொதுமக்களின் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பயணிகள் நிழற்கூடம் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: