எம்எஸ்பி எவ்விதத்திலும் பாதிக்காது: தேவைப்பட்டால் வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தயார்: மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் பேட்டி.!!!

டெல்லி: 3 புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு முழு நன்மை வழங்கக்கூடியது என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா,  உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் பேட்டி அளித்துள்ளனர். அப்போது, பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்,  தேவைப்பட்டால் வேளாண்சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டம் குறைந்தபட்ச ஆதரவு விலையை எவ்விதத்திலும் பாதிக்காது. இதை பிரதமரும், நானும் விவசாயிகளுக்கு விளக்கி உறுதியளித்துள்ளோம். இந்த உறுதியை விவசாயிகளுக்கு, சங்கங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு  எழுத்துபூர்வமாக அளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்துகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. வேளாண் சட்டங்கள் சட்டபூர்வமானவை. வர்த்தகம் தொடர்பான சட்டங்களை இயற்ற  அரசுக்கு உரிமை உண்டு. வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழு, குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ஆகியவை பாதிக்கப்படாது என்றார்.

வரி விதிப்பின் மூலம் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களின் மண்டிகள் பாதிக்கப்படும் என்று விவசாய சங்கங்கள் அச்சப்படுகின்றன.  தனியார் மண்டிகளை மாநில அரசுகள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவற்றுக்கு வரி  விதிக்கலாம் என்றும் தான் நாங்கள் கூறினோம். புதிய சட்டத்தில், விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள்  விரும்புகின்றன. இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

Related Stories: