வேளாண் சட்டத்தை திருத்தம் செய்கிறதா மத்திய அரசு?: இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நரேந்திரசிங் தோமர்

டெல்லி: மத்திய அரசுக்கு விவசாயிகள் ஒத்துழைக்குமாறு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பந்த் போராட்டம் நடந்த நிலையில், இரவு 8 மணிக்கு விவசாய சங்கங்களின் 13 பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார்.

3 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களில் விவசாயிகள் பாதகமாக கருதும் அனைத்து திருத்தங்களையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித்ஷா கூறினார். ஆனால், 3 சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் கடும் உறுதிபாடுடன் உள்ளனர். எனவே, எந்த திருத்தத்திற்கும் சம்மதிக்க முடியாது என கூறினர். இதனால், அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதோடு, மத்திய அரசு ஒவ்வொரு முறையும் சட்ட திருத்தத்ததை பற்றி மட்டுமே பேசி வருவதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், மத்திய வேளாண் அமைச்சருடன் இன்று நடப்பதாக இருந்த 6ம் சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர்.

இது மத்திய அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனிடையே இன்று மாலை 4 மணிக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார். அப்போது, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மத்திய அரசின் திட்டத்தை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அமைதி மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். வேளாண் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய மத்திய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: