கேரளாவில் பரபரப்பு வீட்டுக்கு வந்த முதலை

திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு வாசலில் முதலை வந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவது உண்டு. ‘செம்பருத்தி’, ‘ராவணன்’, ‘புன்னகை மன்னன்’ உட்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளன. இந்த அருவியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஷாபு என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் முன் வினோத சத்தம் கேட்டது. சாபியா கதவை திறந்து பார்த்தார். அப்போது, வீட்டு முற்றத்தில் மெகா சைஸ் முதலை இருந்தது தெரிய வந்தது. பயத்தில் அலறியடித்து வீட்டுக்குள் ஓடி கணவரிடம் கூறினார். ஷாபு வெளியே வந்து முதலையை விரட்ட பார்த்தார்.

ஆனால், அது பயப்படாமல் ஷாபுவை தாக்க பாய்ந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து முதலையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், வீட்டில் இருந்த சோபாவுக்குள் அது ஒளிந்து கொண்டது. தீப்பந்தம் கொளுத்தி காண்பித்தபோது முதலை வெளியே வந்தது. மேலும், களைப்படைந்த அது அங்கேயே படுத்து கொண்டது. இதையடுத்து, கயிறு கட்டி முதலையை பிடித்து அருவியை ஒட்டியுள்ள ஆற்றில் கொண்டு விட்டனர். முதலை வந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் குளிக்கும் இடமாகும். மேலும், ஷாபுவின் இரண்டரை வயது மகன் வீட்டுமுன் எப்போதும் விளையாடுவது வழக்கம். அதிகாலையில் முதலையை கண்டுபிடித்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: