பாம்புகள் குறித்த பல்லாண்டு மூடநம்பிக்கைகள்!

நம்முடைய கிராமப் புறங்களில் இரவில் வயல்களுக்கு செல்பவர்களை கவனித்திருக்கிறீர்களா?கையில் ஒரு தடியை வைத்திருப்பார்கள். ஆளை அடிக்க அல்ல. நடந்துச் செல்லும்போது இந்த தடியை தரையில் தட்டி சப்தம் எழுப்பியபடியே செல்வார்கள். வயல்வெளிகளில் நல்ல பாம்புகள் சகஜம். நாம் செல்லும் வழியில் தெரியாமல் அவற்றை மிதித்து, அவை நம்மை கடித்து.. ஏன் இந்த தொல்லை என்றுதான் தடியால் சப்தம் எழுப்புகிறார்கள். சிறிய அதிர்வினை உணர்ந்தால்கூட பாம்புகள்  உடனடியாக உஷாராகி, தங்கள் மறைவிடங்களுக்கு சென்றுவிடும்.

பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதெல்லாம் சும்மா. பாம்புதான் மனிதனை கண்டு நடுங்குகிறது. மனிதனைவிட ஆபத்தான உயிரினம் உலகில் வேறென்ன இருந்துவிட முடியும்? அப்படியிருக்க,  இந்தியாவில் வருடத்துக்கு ஒரு லட்சம் பேரை பாம்பு கடிக்கிறது, அவற்றில் பத்தாயிரம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று நம்மை குழப்புகிறது ஒரு புள்ளி விவரம்.தனக்கு ஆபத்து, தப்பிக்கவே முடியாது என்கிற நெருக்கடியான நிலையில்தான் பாம்பு ஒரு போடு போடுமே தவிர, சினிமாவில் காட்டுவதை போல தேடி வந்தெல்லாம் யாரையும் கொத்தாது.நம் நாட்டில் மூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை பாம்புகளை குறித்துதான். பாம்பின் விஷத்தையும்விட கொடியது இந்த மூடநம்பிக்கைதான்.

‘பாம்பு கடித்தாலே விஷம்’ என்பது ஆகப்பெரிய மூடநம்பிக்கை. பாம்பைப் பொறுத்தவரை கடிப்பது வேறு டிபார்ட்மென்ட். விஷத்தை செலுத்துவது வேறு டிபார்ட்மென்ட். மிக அரிதான சூழல்களிலேயே  இரண்டையும் சேர்த்து செய்யும். உதாரணத்துக்கு நாகப்பாம்பை எடுத்துக் கொள்வோம். நாகப்பாம்பு கடியில் 80 சதவிகித சம்பவங்களில் அவை விஷத்தை கக்குவதில்லை.பாம்புகள் தாங்கள் உண்ணும் உணவை ஜீரணிக்க, அவற்றிடம் இருக்கும் விஷத்தைதான் பயன்படுத்துகின்றன. தேவையில்லாமல் அவை விஷத்தை வீணடிப்பதில்லை. தற்காப்புக்காக மட்டுமே, தன்  உயிரை காத்துக் கொள்ளும் பொருட்டு விஷத்தை செலுத்தும். விஷத்தை வீணடிக்கும் பாம்புகளின் ஆயுட்காலம் குறைந்துவிடும். தெரியுமா?

பாம்பை பற்றிய கட்டுக்கதைகளை புறந்தள்ளிவிட்டு அறிவியல்ரீதியாக அவற்றைப் பற்றிய அறிதலே இந்த அச்சங்களிலிருந்து விடுபட ஒரே வழி. உலக அளவில் சுமார் 3500 வகை பாம்புகள் இருக்கின்றன. 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பாம்புகள் உலகில் தோன்றிவிட்டன. மனித இனமே கூட இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்  தோன்றியிருக்கின்றன. அப்படியெனில், பாம்புகள் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவு சீனியர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

* பச்சைப் பாம்பு கண்ணை குத்தும்.

*புற்றுகளில் நாம் ஊற்றும் பாலை பாம்புகள் குடிக்கும்.

* கொம்பேறி மூக்கன், தான் கொன்ற மனிதனின் பிணம் சுடுகாட்டில் எரிக்கப்படுவதை மரமேறி பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளும்.

*மகுடி இசைக்கு ஏற்ப பாம்புகள் படமெடுத்து நடனமாடும் (பாம்புகளுக்கு அதிர்வுணர்வு மட்டும்தான், கேட்கும் திறன் இல்லை).

*நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் டூயட் பாடி ஆடும்.

*வயதான நல்ல பாம்பின் தலையில்தான் மாணிக்கம் உருவாகிறது.

*மண்ணுளிப் பாம்புக்கு ரெண்டு தலை.

* நல்ல பாம்பை கொன்றுவிட்டால், அதன் ஜோடி மனிதனை தேடிப்பிடித்து பழிவாங்கும்.

இதெல்லாமே ஜமுக்காளத்தில் வடிகட்டிய மூடநம்பிக்கைகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 275 பாம்பு வகைகள் வசிக்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 60 பாம்பு வகைகளுக்குதான் விஷம் உண்டு. மீதியெல்லாம் விஷம் விஷயத்தில் ஒப்புக்குச் சப்பாணிதான். நம்  வீடுகளில் இருக்கும் பல்லிகளுக்கும், இவற்றுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.விஷமிருக்கும் வகைகளில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய நான்கு வகைகளால்தான் பாம்புக்கடி உயிரிழப்பு பெரும்பாலும் நம் நாட்டில் ஏற்படுகிறது. விஷமற்ற பாம்பு கடித்தாலேகூட, நிறைய பேர் அச்சமடைந்து இரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறி மாரடைப்பால் மரணமடைகிறார்கள்.

கண்ணாடி விரியன் தவிர்த்து மற்ற வகை பாம்புகள், மனித நடமாட்டத்தை கண்டால் அஞ்சி ஓடி ஒளிந்துவிடும். நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை காட்டிலும், பாம்புகளுக்கு நம் மீது பயம்  அதிகம். விரியன் வகை பாம்புகள் நம்மைக் கண்டால் ஓடி ஒளியாமல் அதே இடத்தில் சுருண்டுக் கொள்ளும். அதற்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே தாக்க முயலும்.பாம்புகளை பற்றிய அச்சம் அகன்றால்தான், பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறையும். அதனால்தான் விவேகானந்தரேகூட, “பாம்பின் கடியை பற்றி நீங்கள் கவலைப்படாமல்  இருந்தால், அதன் விஷம்கூட உங்களை எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.

அதையும் தாண்டி பாம்புகளின் மீது அச்சமிருப்பவர்கள், அவை நாம் வசிக்கும் பகுதிக்கு வராத அளவுக்கு தவிர்த்துக் கொள்ள முடியும்.குப்பைக்கூளம், கற்குவியல், மரத்துண்டுகள் குவிந்துக் கிடக்கும் இடங்களே பாம்புகளின் வசிப்பிடங்கள். நம் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால், அங்கே பாம்புகள் வசிப்பதற்கு ஏற்ற மறைவிடமே இருக்காது.

இந்திய வனப்பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, அரிய உயிரினமாகிவிட்ட ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வகைகள். இவற்றை கொல்வது, வீட்டில்  வளர்ப்பது, துன்புறுத்துவது போன்றவை ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றங்கள். இதற்காக மற்ற பாம்புகளை அடித்துக்  கொல்லலாமா என்றால் அதுவும் கூடாது. வனச்சட்டம் பாம்புகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.இந்த உலகில் நாம் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை பாம்புகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறதுதானே?

Related Stories: