நாகை, திருவாரூரில் மழையால் பாதித்த பயிர்களை வயலில் இறங்கி முதல்வர் பழனிசாமி ஆய்வு வேளாங்கண்ணி, நாகூரில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்பு

நாகை, :நாகை, திருவாரூரில் மழையால் பாதித்த பயிர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் நடந்த பிரார்த்தனையிலும் அவர் கலந்து கொண்டார். நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். இரவு அவர் நாகை  வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் மாவட்ட நிர்வாகம், அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில்  தங்கினார்.

இன்று காலை 8 மணி அளவில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு வந்தார். பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் மற்றும் பங்கு தந்தைகள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு நடந்த பிரார்த்தனையில் முதல்வர் பங்கேற்றார்.  அப்போது முதல்வருக்கு மாதா சொரூபம் நினைவு பரிசாக வழங்கினர். பின்னர் நாகூர் தர்காவுக்கு சென்ற முதல்வருக்கு தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் மற்றும் பலர் துவா ஓதி வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், மழையால் இடிந்த தர்கா குளத்தை பார்வையிட்டார்.

இதன்பின்னர் முதல்வர் கீழையூர் அருகே மேலபிடாகைக்கு சென்று வயலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் கண்ணீருடன் பாதிக்கப்பட்ட பயிர்களை  காட்டி நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். தொடர்ந்து திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதல்வர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுகிறார். மாலையில் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார்மீனா ஆகியோர் தலைமையில் எஸ்பிக்கள் துரை(திருவாரூர்), ஓம்பிரகாஷ்மீனா(நாகை), ஸ்ரீநாதா(மயிலாடுதுறை) ஆகியோர் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: