கொரோனாவிற்கு பின் ஏலக்காய் விலை தொடர்ந்து உயர்வு

போடி: கொரோனாவிற்கு பின் ஏலக்காய் விலை, தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக- கேரள எல்கை உள்பட இடுக்கி மாவட்டம் சேர்த்து சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டுள்ளது. தமிழக, கேரள மக்கள் இணைந்து விளைவிக்கும் அரிய வகை தங்கத்திற்கு நிகரான ஏலக்காய் சீசன் ஆடியில் துவங்கி 40 நாட்களுக்கு ஒருமுறை என 6 முறை அறுவடை செய்து வருகின்றனர். உற்பத்தி ஏலக்காய்களை இந்திய நறுமண வாரியத்தின் வாயிலாக கேரளா புத்தடியிலும், போடி ஸ்பைஸல் போர்டிலும் வாரத்தில் 6 நாட்கள் இசேவை மூலம் ஏலம் நடக்கிறது. தமிழக, கேரள வியாபாரிகள் இரு மையங்களிலும் கலந்து கொண்டு ஏலம் எடுக்கின்றனர்.

இதற்கிடையே கொரோனா தொற்றால் ஏற்றுமதி முடங்கியதால் மலை உச்சியில் இருந்து தள்ளியது போல், ஏலக்காய் தரை ரேட்டுக்கு தள்ளப்பட்டு உலக வர்த்தகத்தில் விலையும், விற்பனையும் இன்றி கடும் வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில் ஊரடங்கு கூடுதல் தளர்வுகளால் ஏலக்காய் விலையும், விற்பனையும் கடந்த 3 மாதங்களாக படியேற ஆரம்பித்துள்ளது. கடந்த மாதங்களில் பக்ரீத், தீபாவளி விஷேசங்கள் கைகொடுத்த நிலையில் தற்போது குளிர் தீவிரமாகி இருப்பதால் இதை கட்டுப்படுத்தும் அருமருந்து ஏலக்காயில் உள்ளது. இதனால் வெளிநாடுகளில் ஏலக்காய்களின் தேவை அதிகரித்து இருப்பதால், அதன் விலையும் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் உள்ளது.

நேற்று மட்டும் போடியில் ஒரே நாளில் 70 மெட்ரிக் டன் ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.720 முதல் பெருவட்டு ரூ.2000 வரை ஏலம் கேட்கப்பட்டது. தொடர் விலை உயர்வு, தேவையும் அதிகரிப்பால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: