'வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகம் கொடுத்தது நாங்களே'.. பாஜகவின் பொய் பேச்சை அம்பலமாக்கிய நிதியமைச்சக புள்ளி விவரங்கள்!!

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என பிரதமரும் மத்திய வேளாண்துறை அமைச்சரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். குறிப்பாக 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எம்எஸ்வி எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட அதிக அளவில் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் காங். ஆட்சி காலத்தை விட பாஜக ஆட்சியில் எம்எஸ்வியின் அளவு குறைந்திருப்பது நிதியமைச்சக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

* குறைந்தபட்ச ஆதார விலை அதிகம் கொடுத்தது யார்?:

கடந்த 2006 முதல் 2016 வரையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெல், கோதுமை, உளுந்து, மக்காச்சோளம், போன்ற பிரதான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 90% முதல் 205% வரை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 40% முதல் 73% வரை மட்டுமே உயர்வு கண்டுள்ளது.

* நெல் பொது ரகம்: 2006 - 2014 காங்கிரஸ் ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல் பொது ரகத்தின் குறைந்தபட்ச ஆதார விலை 580 ரூபாய், இது 2013 - 2014-ம் ஆண்டில் 1310 ரூபாயாக உயர்ந்து 8 ஆண்டுகளில் 126% உயர்வை கண்டது. ஆனால் 1,310 ரூபாயாக இருந்த நெல் பொதுரகத்தின் குறைந்தபட்ச ஆதார விலை 2014 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான பாஜக ஆட்சியில் 558 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு 1,868 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் 6 ஆண்டுகளில் 43% அளவுக்கே குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.

* கோதுமை: வட இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2006 மற்றும் 2007-ம் ஆண்டு 750 ரூபாயாக இருந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே வந்து 2013 - 2014-ல் 1,400 ரூபாயாக வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இந்த உயர்வு 87% ஆகும். ஆனால் 2014-க்கு பிறகான 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை காங்கிரஸ் அரசு உயர்த்தியதன் பாதி அளவுக்கு கூட உயர்த்தி வழங்கப்படவில்லை. 6 ஆண்டுகளில் 41% மேட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது 1975 ரூபாயாக உள்ளது.

* உளுந்து: உளுந்து பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2006 - 2007-ல் 1,410 ரூபாயாக இருந்த நிலையில் 2013- 2014-ம் ஆண்டில் 4,300 ரூபாயாக உயர்வு கண்டது. இந்த உயர்வு என்பது 205% ஆகும். ஆனால் 2014- 2020-ம் ஆண்டில் 4,300 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் உளுந்துக்கான விலை 6 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 40% மட்டுமே உயர்வை கண்டு 6,000 ரூபாயாக உள்ளது.

* கடலை பருப்பு: கடலை பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2006-2014-ம் ஆண்டு வரை 115% உயர்ந்து 3,100 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் 2014 முதல் 2020 வரை 65% மட்டுமே உயர்வு கண்டு 5,100 ரூபாய் வழங்கப்படுகிறது.

* மக்காச்சோளம்: 2006-ம் ஆண்டு ஒரு குவிண்டால் மக்காச்சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை 540 ரூபாயாக இருந்த நிலையில், 2013 - 2014-ல் 1,310 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 143% உயர்ந்த மக்காச்சோளத்தின் ஆதார விலை பாஜக ஆட்சி காலத்தில் 41% மட்டுமே உயர்வு கண்டு 1,850 ரூபாயாக உள்ளது.

விவசாயிகளுக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க போவதாகவும், வாக்குறுதி அளித்து வருகின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளுக்கு அளித்த குறைந்தபட்ச ஆதார விலை உயர்வில் பாதியை கூட இதுவரை அளிக்காதது நிரூபணமாகியுள்ளது. இதனால் 2 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகுமா? இல்லையா? என்பதை விட தற்போதைய நிலையாவது நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: