ராமர் கோயில் நன்கொடை :வசூல் கணக்குக்கு பாஜ பொறுப்பேற்குமா?; சட்டீஸ்கர் முதல்வர் கேள்வி

ராய்ப்பூர், :ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை வசூல் ெதாடர்பான கணக்குக்கு பாஜக பொறுப்பேற்குமா? என்று சட்டீஸ்கர் முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம், ராமர் கோயில் கட்டுவதற்கு பலரிடம் நன்கொடைகள் பெறப்பட்டும் வருகின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக வசூலிக்கப்படும் நன்கொடைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ராமர் கோயில் கட்டுமானத்திற்காக வசூலிக்கப்படும் தொகை குறித்த விபரங்களை கணக்கிட வேண்டும். வசூலிக்கப்படும் நன்கொடைகளுக்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும். முதலில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜைக்காக வசூலிக்கப்பட்ட நன்கொடை குறித்த கணக்கை பாஜக கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.101 கோடி மாநில அரசு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று சட்டீஸ்கர் மாநில பாஜக எம்எல்ஏ பிரிஜ்மோகன் அகர்வால் கூறிய கருத்துக்கு முதல்வர் பூபேஷ் பாகேல் தற்போது பதில் அளித்துள்ளார். இதற்கு, பிரிஜ்மோகன் அகர்வால் கூறிய பதிலில், ‘ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி எந்த பங்களிப்பும் செய்யவில்லை. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாக எந்தக் கணக்கையும் கேட்க உரிமை இல்லை’ என்றார்.

Related Stories: