நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது: கடைகளை வலுக்கட்டாயமாக மூட முயன்றால் கடும் நடவடிக்கை...குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேட்டி.!!!

காந்திநகர்: நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு இன்று 12வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், டெல்லி எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது வீதிகளிலும், சாலைகளிலும் கூடாரம் அமைத்து இரவுபகலாக அங்கேயே சமைத்து போராடி வருகின்றனர்.இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. 4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தபோது, வேளாண் சட்டம் ரத்து தொடர்பாக மத்திய அரசுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அந்தவகையில் நாளை (டிச. 8) நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்தது. இதற்கிடையே நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த்தை குஜராத் ஆதரிக்கவில்லை. கடைகளையும் பிற நிறுவனங்களையும் யாராவது வலுக்கட்டாயமாக மூட முயன்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.பி.எம்.சி. தொடர்பாக குஜராத் விவசாயிகளுக்கு அத்தகைய நிலைமை இல்லை. நாளைய பந்த் வெற்றி பெறாது. பந்த் என்ற பெயரில் எந்தவொரு வன்முறை சம்பவமும் நடக்கக்கூடாது என்பதற்கான முழுமையான ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories: