மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் புதிய சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை பாதுகாப்போம்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

சென்னை: “இன்னும் 5 மாதத்தில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்  தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், புதிய சட்டத்தை  நிறைவேற்றி விவசாயிகளை பாதுகாப்போம்” என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமை வகித்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி வருகிறார்கள்.

அம்பானி, அதானி போன்றவர்களுக்கு சாதகமாக பதுக்கல் சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. தக்காளியை கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்து, அதிக விலைக்கு விற்கலாம். தற்போதைய வெங்காய விலையேற்றத்துக்கு இதுவே காரணம். டெல்லியில் தமிழக விவசாயிகள் அம்மணமாக நின்று போராடினார்கள். எலிக்கறி சமைத்து சாப்பிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி திரும்பிக்கூட பார்க்கவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில் அனைவரும் வருகிறார்கள். நான்தான் விவசாயி என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் எண்ணங்கள் தெரியும். விவசாயிகளின் நாடித் துடிப்பு தெரியும்.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து சட்டம் இயற்றலாம். டெல்லியில் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டுகிறார்கள். இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது, பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் புதிய சட்டம் நிறைவேற்றி விவசாயிகளை பாதுகாப்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: