விவசாயி வேடம் போட்டு பசுமை தழைக்க தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தை கலைத்திட எங்கும் கருப்புக் கடல் ஆகட்டும் டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: விவசாயி வேடம் போட்டு - பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின்  வேடத்தைக் கலைத்திட- கருப்புக் கொடிகள் உயரட்டும். தமிழகமே கருப்புக் கடல்  ஆகட்டும், டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம் என்று திமுக  தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு  முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் திமுக பங்களிப்பு என்பது முக்கியமானது. டிசம்பர் 5 காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு  மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுகவை எதிர்ப்பதாக நினைத்து, விவசாயிகளுக்கு எதிரான குரலில் உளறிக் கொட்டியிருக்கிறார். மத்திய பாஜ அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள் பற்றி திமுகவுக்குப்  புரியவில்லையாம். பாஜ அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்கள் மூன்றிலும் எங்கேயாவது ஓரிடத்திலேனும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று   ‘நானும் விவசாயி’ என்கிற எடப்பாடி பழனிசாமி எடுத்துக்காட்டுவாரா? விவசாயிகள் என்ன விளைவிக்கலாம், யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு இந்தச் சட்டங்கள் அள்ளிக் கொடுப்பதை ‘டெண்டர் விவசாயி’ எடப்பாடி அறிவாரா? தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி, பெரிய வியாபாரிகள் - பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு  ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய விவசாயிகளை அடிமையாக ஆக்குகிறது என்பதை அடிமை ஆட்சி நடத்தும் தலைமை அடிமையான பழனிசாமி எப்படி அறிவார்?

இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 95 சதவீதம் பேர் சிறு - குறு விவசாயிகள்தான். இவர்கள் விளைவிக்கும் உணவு தானியங்கள்  பழங்கள் - காய்கறிகளுக்குக் குளிர்பதனக்கிடங்கு கிடையாது. குளிர்பதனக் கிடங்கு வைத்துள்ள கார்ப்பரேட்  நிறுவனங்களின் கைகளுக்கு விவசாயம் செல்லும் வகையில் வேளாண் திருத்தச் சட்டம் உள்ளது என்பதாவது உறைக்கக்கூடிய அளவில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா? அல்லது பதவி சுகத்தில் உணர்விழந்து உறைந்து போய்க் கிடக்கிறாரா?

எந்த லட்சணத்தில் மத்திய பாஜ அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார்? போகிற இடத்தில் எல்லாம் ‘நான் விவசாயி’ என்று அவர் சொல்வதே, தன் வேடம் கலைந்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில்தான்.  ஏனென்றால், அவர் உண்மையான விவசாயி அல்ல, இடைத்தரகர்தான். அதையேதான் அரசியலிலும் செய்து பதவி சுகம் அனுபவித்து, கஜானாவைக் கொள்ளையடித்து வருகிறார். அதற்கான வெகுமக்களின்  தீர்ப்பும் தண்டனையும் நெருங்கி  வருகிறது.

அவற்றைத் தமிழக வாக்காளர்கள் கைகளில் ஒப்படைத்துள்ள திமுக, மக்கள் நலனுக்கான அறப்போர்க் களங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும்-தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும்  தார்மீக ஆதரவு தரும் வகையில் திமுக நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட செயலாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய  நகர   பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றிகாணட்டும். விவசாயி வேடம் போட்டு - பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட- கருப்புக்  கொடிகள் உயரட்டும். தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும், டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>