தொடர் மழையால் வேல்ராம்பட்டு, உழந்தை உள்பட 48 ஏரிகள் நிரம்பின பாகூர், ஊசுட்டேரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு -படுகை அணைகளும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரி :  புரெவி புயலையொட்டி புதுவையில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய ஏரிகளான கனகன், வேல்ராம்பட்டு, முருங்கப்பாக்கம் ஏரி உட்பட 48 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊசுட்டேரி மற்றும் பாகூர் ஏரியிலும் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.

 புதுச்சேரியில் ஆண்டுதோறும் சராசரியாக 1200 மி.மீ. மழை பெய்து வருகிறது. அதன்படி, 2020ம் ஆண்டு குளிர்கால சீசனில் 41.40 மி.மீ. மழையும், கோடை சீசனில் 63.40 மி.மீ. மழையும், தென்மேற்கு பருவமழை சீசனில் 328.20 மி.மீ. மழையும் பெய்தது.  இந்நிலையில், வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் இறுதியில் துவங்கியது. அந்த மாதம் 181.40 மி.மீ. மழை பதிவாகியது. தொடர்ந்து, நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான நிவர் புயல்  மரக்காணம் அருகே  கரையை கடந்தது. இதன் காரணமாக, நவ.24ம் தேதி மட்டும் 303.5 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.  கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 1,126.20 மி.மீட்டரும், அதிகபட்சமாக  நவம்பர் மாதத்தில் 512.40 மி.மீ அதிகமாக பெய்துள்ளது.

 இந்நிலையில், வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக  கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, டிச.2ம் தேதி காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை புதுவையில் 76.2 மி.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.  இதன் மூலம் நடப்பாண்டில், சராசரி மழை அளவை தற்போதே கடந்துவிட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 புதுச்சேரியில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. நேற்றைய நிலவரப்படி காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் கடப்பேரி, துத்திப்பட்டு ஏரி, கரசூர் ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி, உழந்தை ஏரி, கைக்கிளைப்பட்டு ஏரி, கோர்க்காடு ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, திருபுவனை ஏரி, பாகூர் சித்தேரி, அரங்கனூர் ஏரி, கனகன் ஏரி, வேல்ராம்பட்டு ஏரி, பனையடிக்குப்பம் பெரியேரி உள்ளிட்ட 48 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

 புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரியில் 3.50 மீட்டர் கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியும். ஊசுட்டேரி கால்வாயில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தற்போது 2.55 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அதேபோல், மற்றொரு பெரிய ஏரியான பாகூர் ஏரியின் உயரமான 3.60 மீட்டரில், 2.24 மீட்டருக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால் ஊசுடு ஏரி, பாகூர் ஏரி நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கின்றன. மேலும் கொம்மந்தான்மேடு, பிள்ளையார்குப்பம், சுத்துக்கேணி உள்ளிட்ட படுகை அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் இந்தாண்டு விவசாயத்துக்குப் போதுமான அளவு நீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: