தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்: இருகால்களையும் இழந்தவர் விடாமுயற்சியால் பெரம்பலூர் துணை கலெக்டர் ஆனார்

பெரம்பலூர்: போலியோ பாதித்து இரு கால்கள் செயலிழந்தும் படித்து முன்னேறி பெரம்பலூர் மாவட்ட துணை கலெக்டராக மாற்றுத் திறனாளி பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வருபவர் ஆர்.முனியப்பன் (46). கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்த இவர், தனது ஒன்றரை வயதிலேயே போலியோவால் இருகால்களும் செயலிழந்தவர். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்காது, பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இரு கைகளை ஊன்றியபடியே தரையில் தவழ்ந்து சென்று பாலிடெக்னிக் மற்றும் டிப்ளமோ இன் கமர்ஷியல் பிராக்டீஸ் (டிசிபி) முடித்தார்.

பிறகு கரூர் அரசு கலைக் கல்லூரியில் பிகாம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்காம் (தொலைதூரக் கல்வி), தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார். 2001-ல் குரூப் -2 தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு வருவாய்த்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு 2008ல் கரூர் கலெக்டர் அலுவலக டெபுட்டி தாசில்தார், 2014ல் கிருஷ்ணராயபுரம் ரெகுலர் தாசில்தார், 2018ல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டெபுட்டி கலெக்டர் நிலையில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் குறித்து முனியப்பன் கூறுகையில், இலக்கை அடைய விடா முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்று கூறினார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.

Related Stories: