தமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன?; அரசியலில் அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா?: மதுரைக் கிளை

மதுரை: தமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலில் உள்ள அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியது. புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமா எனவும் கேட்டுள்ளது. தென்காசி அரசு மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் கட்ட தடைகோரி வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. புதிய மாவட்டங்களை உருவாக்கும் போது சீரான எல்லை, வழிமுறைகள் பின்பற்ற வேண்டாமா என தமிழக அரசிடம் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியது. தென்காசி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது என நீதிபதி கேட்டார்.

தென்காசி மாவட்டத்திற்கான புதிய ஆட்சியர் அலுவலகம் மேலகரம் பேரூராட்சியில் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் குற்றாலம் மெயின் அருவி, காட்டாறு, செண்பகாதேவி அருவியிலிருந்து தென்கால் பாசனத்துக்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைந்துள்ளது என நெல்லை நாரணபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்கவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதித்து, வேறு பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories:

>