கொரோனா பரவல் அச்சத்தால் 3,499 விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் 45 நாள் நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழலில் திகார், சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், டெல்லியில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வீசுவதன் காரணமாக, ஏற்கனவே ஜாமீனில் உள்ள கைதிகளுக்கு நீட்டிப்பு செய்வது குறித்து கடந்த நவம்பர் 28ம் தேதி எச்பிசி கமிட்டி கூடி மீண்டும் ஆலோசித்தது. அப்போது, திகார் சிறையில் ஏற்கனவே அதன் திறனுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் தற்போதுள்ள சூழலில் ஜாமீனில் உள்ள கைதிகளை சரணடைய கூறினால் அது நோய் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. எனவே, இடைக்கால ஜாமீனை நீட்டிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்நிலையில், இதுகுறித்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்தார்த்த மிருதுள், மற்றும் தல்வாந்த் சிங் அமர்வு, எச்பிசி பரிந்துரையை ஏற்று 3,499விசாரணைக் கைதிகளுக்கான  இடைக்கால  ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டனர். அதேபோன்று, அவசரகால பரோலில் சென்ற 1, 183 கைதிகளுக்கு 6 வாரம் நீட்டித்து உத்தரவிட்டனர்.

Related Stories: