டெல்லி என்சிஆர் உட்பட மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசுகளுக்கு முழு தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி:  கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு டெல்லி-என்சிஆர் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசுகளை வெடிக்க முழு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி என்சிஆரில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி தாமாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம்(என்ஜிடி) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது என்ஜிடி நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: காற்றின்தரம் “மோசம்” மற்றும் அதற்கு மேல் உள்ள டெல்லி என்சிஆர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் பட்டாசுகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் முழு தடை விதிக்கப்படுகிறது.

எனினும், காற்றின் தரம் திருப்தி மற்றும் அதற்கு கீழே உள்ள பகுதிகளில் பசுமை பட்டாசுகளை இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, பசுமை பட்டாசுகளை இரவு 11.55 முதல் 12.30 வரை வெடிக்கலாம். குறிப்பிட்ட திருவிழாக்கள் தவிர, பிறவற்றிற்கு பட்டாசுகள் பயன்படுத்த சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். பட்டாசுகளுக்கான தடையை அமல்படுத்துவதை உறுதி செய்வதோடு, இழப்பீடு வசூலிப்பதையும் மாவட்ட ஆட்சியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மேலும், முடிந்தவரை ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஒரு காற்றுத்தர கண்காணிப்பு மையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: