ஆற்றை மாசுபடுத்துவோரை ஏன் குண்டாஸில் கைது செய்யக்கூடாது? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை:  ஆற்றை மாசுபடுத்துவோரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாமாக முன்வந்து தாக்கல் ெசய்யப்பட்ட மனுவில்,  கரூர் மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால் அமராவதி ஆறு மாசடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுநீரும் இந்த ஆற்றில்தான் சேருகிறது. ஆறு  மாசடைவதால் விவசாயமும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு  ஆளாகின்றனர். எனவே, அமராவதி ஆற்றில் சாய கழிவுநீர் கலப்பதை தடுத்து,  பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், “ஆற்றை மாசுபடுத்துபவர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது” என கேள்வி எழுப்பினர்.  பின்னர் நீதிபதிகள், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு  வாரியம், கரூர் கலெக்டர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய பொறுப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: