கிராமங்களுக்கே செல்லாத கிராம உதவியாளர்கள்: விஏஓ, தாலுகா அலுவலகங்களிலேயே காத்துகிடப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 526 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் தலா ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்பட்டு, அந்த கிராமத்தில் நடக்கும் நல்லது, கெட்டது, யாருக்கு என்னென்ன சொத்துக்கள், யார் வாரிசுதாரர், எத்தனை பேர் வசிக்கிறார்கள், பிறப்பு, இறப்பு என எந்த விஷயமாக இருந்தாலும், விரல் நுணியில் தகவல்களை தெரிந்து வைத்து, உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும்போது தெரிவிப்பது கடமை. அதனால்தான் அந்த காலத்தில், `ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டிற்குள் ஒளிந்த கதை போல் என்பார்கள்.

அந்த அளவிற்கு கிராம உதவியாளர்கள் அரசுக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தனர். முன்பு பணியாற்றிய கிராம உதவியாளர்கள் கிராமத்திலேயே தங்கி, வீட்டு வரி, இருசால் வரிகளை வசூல் செய்து, 3 மாத காலத்திற்குள் முடித்து வைப்பர். அதுபோக விபத்து, தற்கொலை செய்து கொண்டவர்களை, உயர் அதிகாரிகள் பார்வையிடும் வரை, பாதுகாப்பு கருதி விடிய விடிய காத்திருப்பர். போலீசார் ஒரு கிராமத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்து, குற்ற நடவடிக்கைகளை கேட்டறிந்து, அதற்குபின் நடவடிக்கை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், மாவட்டத்தில் காலியாக இருந்த இடங்களுக்கு கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் சிலர் கிராமங்களுக்கே செல்வதில்லை. என்ன நோக்கத்திற்கு இவர்கள் நியமிக்கப்பட்டார்களோ அந்த வேலையை தவிர, மற்ற பணிகளில் ஆர்வம் காட்டுவதாக மக்களிடையே புகார் எழுந்துள்ளது.

* பொதுமக்கள் குற்றச்சாட்டு

கிராம மக்கள் சிலர் கூறுகையில், “பெரும்பாலான கிராம உதவியாளர்கள், விஏஓ மற்றும் தாலுகா அலுவலகத்தில், பல்வேறு சான்றுகள் பெற வருபவர்களிடம், வருவாய் உள்ள பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் யாரும் பணியமர்த்தப்பட்ட கிராமங்களுக்கு வருவதில்லை. ஆகவே இவர்களை அந்தந்த கிராமங்களில் தங்கி பணி செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: