வாகனங்களுக்கு எப்.சி வழங்குவதில் மெகா வசூல் போக்குவரத்து துறை மீது வழக்குபதிவு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: வாகனங்களுக்கு எப்.சி வழங்குவதில் மெகா வசூல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போக்குவரத்து துறை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்டிஓ அலுவலகங்களுக்கு எப்சி.க்கு செல்லும் வாகனங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்துதான் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். கருவி போன்றவை வாங்கிப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டு, அதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்குள், சில தனியார் நிறுவனங்களை அனுமதித்தார். அவற்றின் மூலம் மெகா வசூல் செய்து கொண்டிருக்கும் மோசடிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு வாகனம் சாலையில் ஓடுவதற்கு தகுதி படைத்ததாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அதற்கு எப்சி வழங்குவதும், அந்த சான்றிதழ் காலாவதி ஆனதற்கு பிறகு புதுப்பிப்பதும், மோட்டார் வாகன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யும் அதிகாரி அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் வாகனத்திற்கு எப்சி வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. ஆனால் ஊழல் செய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையோ; ஈரோட்டிலும், சென்னையிலும் உள்ள குறிப்பிட்ட அந்தத் தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டை உள்ளிட்ட கருவிகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்கிறது. அடுத்தபடியாக, பொருத்தி விட்டு அந்த நிறுவனம் அளிக்கும் தகுதிச் சான்றிதழின் அடிப்படையில் மோட்டார் வாகன அதிகாரி சான்றளிக்க வேண்டும் என்கிறது அந்த சுற்றறிக்கை. இது என்ன அரசு நிர்வாகமா அல்லது போக்குவரத்துத்துறை அமைச்சர் நடத்தும் துக்ளக் தர்பாரா?

தமிழகத்தில் 12 லட்சம் கனரக வாகனங்கள் இருக்கிறது என்றால், அவை அனைத்தும், எப்சி.க்கு தேவையான ஒளிரும் பட்டைகள் உள்ளிட்ட அனைத்துக் கருவிகளையும், இந்தச் சில தனியார் நிறுவனங்களிடம்தான் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, ஊழல் செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள ஓர் அதிகாரபூர்வமற்ற ‘செட்அப்’ ஆகும். வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளையும், வாகனங்களுக்கு சொந்தக்காரர்களையும், இந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில்தான் கருவிகள் வாங்க வேண்டும், அங்கீகாரக் கடிதம் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை உடனே போக்குவரத்துத்துறை அமைச்சர் கைவிட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஏன் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது, இதுவரை கமிஷன் வசூல் எவ்வளவு, மக்களின் பாதுகாப்புக்கு எதிரான விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தது யார் என்பது குறித்து எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி இந்த அரசு செய்யத் தவறினால், திமுக ஆட்சி அமைந்தவுடன் போக்குவரத்துத்துறையில் நடந்துள்ள இந்த ‘மெகா வசூல்’ முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: