புரேவி புயலையொட்டி தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி: புரேவி புயலையொட்டி, பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமை ச்சகம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான தீவிர புயலான நிவர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடையே கடந்த 25, 26ம் தேதிகளில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதிலிருந்து மீண்டும் வர சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தெற்கு அந்தமான் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி, மன்னார் வளைகுடா வழியாக திருநெல்வேலி மாவட்டம் வழியாக கரையை கடக்கும். நாளை தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘புரேவி புயலையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்ய கூடும். இதனால், அணைகளின் நீர்மட்டம் உயரும் என்பதால், தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள நீர்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிகளவில் நீர்வரத்து இருக்கும் என்றும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: