மாநிலத்தில் பாஜ இரண்டாக உடையும்: ராமலிங்கரெட்டி ஆருடம்

பெங்களூரு: மாநிலத்தில் கடந்த 2013ல் நடந்தது போல் பாஜ இரண்டாக உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது என மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.  இதுதொடர்பாக  நிருபர்களிடம் மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது: கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதே நேரம் பாஜவினர் ஆபரேசன் தாமரையால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியில் அமர்ந்துள்ளது.  பாஜ பதவியை கைப்பற்றி இருந்தாலும்  மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. காங்கிரசில் மாற்று கருத்துகள் இருந்தாலும் அது விரைவில் சரி செய்யப்படும். அதே நேரம் பாஜவில் இப்போது பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.  2013ல் முதல்வர் எடியூரப்பா மட்டும் இன்றி அமைச்சர் ராமுலு ஆகியோர் தனியாக பிரிந்து சென்றனர்.

அது போன்ற  சூழ்நிலை இப்போது பாஜவில் உருவாகியுள்ளது.  அமைச்சர் பதவிக்கான போட்டியில் குழப்பம் உருவாகியுள்ளதால் விரைவில் பாஜ கட்சி உடைந்துவிடும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பது வழக்கமாகும்.

அதே போல் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்றுள்ளதே தவிர இதில் வேறு எந்த விஷயமும் கிடையாது. காங்கிரஸ்  மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து நீண்ட நாள்  ஆகிவிட்டது.

அதன் காரணமாக மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை  நடத்தியுள்ளோம். வருகிற பொது தேர்தலை முன்னிட்டு இப்போதில் இருந்து தயாராகி வருகிறோம், என்றார்.

Related Stories: