இன்று கார்த்திகை தீபத்திருவிழா 3 நாட்களாக பூக்கள் விலை ஏறுமுகம்: நெல்லையில் அகல்விளக்கு,பொரி விற்பனையும் ஜோர்

நெல்லை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நெல்லையில் 3வது நாளாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் அவல், பொரி, அகல்விளக்கு விற்பனையும் களைகட்டியது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் சுபமுகூர்த்தம் என்பதால் ஏராளமான திருமண விழாக்கள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (நவ.29) திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக நெல்லையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த 3 நாட்களாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.800 மற்றும் 700 என்ற விலையில் நெல்லையில் விற்பனையானது.

பிச்சிப்பூ கிலோ ரூ.750க்கு விற்பனையானது. இவற்றின் வரத்து நெல்லை, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் இருந்தாலும் பண்டிகை காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கேந்திப்பூ கிலோ ரூ.120க்கும், ரோஜா ரூ.120 முதல் 150 வரையிலும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், அரளி கிலோ ரூ.300க்கும், பச்சை கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்தாலும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பூக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அவல், பொரி, மெழுகுவர்த்தி, அகல் விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் களை கட்டி காணப்பட்டது. சிறிய அகல் விளக்கு ரூ.2 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சாலைகளில் ஏராளமான மண் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி விற்பனை கடைகள், புதிதாக தோன்றியுள்ளன.

Related Stories: