வேலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை கொட்டும் மழையில் கலெக்டர் ஆய்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இதற்கிடையே நேற்று காலை முதல் கலெக்டர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் அடுத்த சிங்கிரி கோயில் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள், புயல் காரணமாக சேதமடைந்தது. சேதமடைந்த வாழை மரங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். மேலும் விவசாயிக்கு ஆறுதல் கூறினார். அப்போது உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயி கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து நாகநதியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் யாரும் நாகநதி கரையோரம் செல்லாத வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளிகொண்டா பெரிய ஏரிக்கு பேயாற்றிலிருந்து நீர்வரத்து அதிகளவில் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியையும், பள்ளிக்குப்பம் செக்டேம் பகுதியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, ஏரியை சுற்றியுள்ள மக்கள் தாமதிக்காமல் பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளிக்கட்டிடத்துக்கு செல்லுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதோடு மாவட்டம் முழுவதும் ஆறுகள், வாய்க்கால்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  வசிக்கும் குடியிருப்புக்குள் வெள்ளம் செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அகரம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார். இதேபோல் ஒவ்வொரு பகுதியாக கொட்டும் மழையிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் தாலுகா வாரியாக அமைக்கப்பட்ட குழுவினர் பணிகளை மேற்கொண்டனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலமதியில் மண் சரிவு:

நிவர் புயல் காரணமாக வேலூர் சுற்றுப்பகுதியில் பெய்த கன மழையால் பாலமதி மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: