நீடாமங்கலம், சீர்காழியில் 10 ஆயிரம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியது

நீடாமங்கலம்: நீடாமங்கலம், சீர்காழியில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அவைகளை படிப்படியாக வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் நிவர் புயல் தாக்க கூடும் என அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டனர். இதேபோல வாழை, தென்னை மரங்களின் மட்டைகளையும் ஓரளவு வெட்டி மரங்களை பாதுகாத்தனர். தங்கள் வீடுகளை பாதுகாக்க படுதாக்களை வாங்கி வீடுகளில் கட்டி நேற்று முன்தினம் இரவு முழுவதும் பாதுகாத்து வந்தனர். மேலும் வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களையும் முன்கூட்டி சேகரித்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் புயல் காற்று அதிகம் இல்லாததால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நீடாமங்கலம் பகுதியில் 68.6 மில்லி மீட்டர் தொடர்மழை பெய்தது.

இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சுமார் 23 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பகுதி, சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர், காணூர், அன்னவாசல், மேலாளவந்தசேரி, அரிச்சபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் இளம் நடவு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. பல இடங்களில் வடிகால் தூர் வாராமல் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. நேற்று காலை மழை பெய்யாததால் பல இடங்களில் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை படிப்படியாக வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், அட்டகுளம், எடக்குடி, வடபாதி, திருவெண்காடு, மங்கைமடம், நாங்கூர், திருவாலி, கீழச்சாலை, கதிராமங்கலம், அகணி, நிம்மேலி, வள்ளுவகுடி, கொண்டல், வடகால், எடமணல், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நடவு நெற்பயிர்கள் தற்போது நல்ல நிலையில் இருந்த வந்தன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நிவர் புயலின் காரணமாக கனமழை பெய்ததால் வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக தற்பொழுது சீர்காழி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விடும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வருண பகவான் மழை பெய்யாமல் கருணை காட்டினால் மட்டுமே மூழ்கிய நெற்பயிரை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories: