நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை..!! காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம்; முதல்வர் பழனிசாமி

கடலூர்: நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 2,999 முகாம்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம்.

இங்கு 52 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். கடலூரில் 77 மின் கம்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டன. இன்று சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் காற்றினால் கடலூரில் 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்படாவிட்டால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அரசு அறிவிப்புகளை மக்கள் சரியாக பின்பற்றியதால் பெரும் பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1,611 ஹெக்டர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பைத் தடுக்க, மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின் விநியோகம் தொடங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். முழுமையாக கணக்கெடுத்த பின்னர் சரியான புள்ளிவிவரங்கள் கிடைத்த பிறகு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இன்று பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: