கடலூர் மாவட்டத்தின் ரெட்டிச்சவாடியில் நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

கடலூர்: கடலூரில் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி நேரில் சென்று ஆய்வு செய்கிறார். மழைநீர் தேங்கியுள்ள வேளச்சேரி, தரமணி பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழைநீர் அதிகரித்து சாலைகள், குடியிருப்புகளில் புகுந்தது. சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளக்பெருக்கு ஏற்பட்டது.

நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி - காரைக்கால் இடையே கரையை கடந்தது. அப்போது 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்றும், கனமழையும் பெய்தது. புதுச்சேரி மட்டுமின்றி கடலூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் காற்று காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், புயல் பாதித்த கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். நிவர் புயலால் ரெட்டிசாவடி பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்தார். புயல் பாதிப்புக்குள்ளான வாழைத் தோட்டத்தில் இறங்கி நடந்து சென்று ஆய்வு செய்தார்.

முதல்வருடன் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர், ஆட்சியர் மற்றும் கடலூர் மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் ஆகியோரும் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். அதேபோன்று, சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 3 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு வேளச்சேரி மற்றும் தரமணி பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் சென்னை நகரில் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழை இன்று காலை சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: