சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா டிசம்பர் முதல் வாரத்தில் விடுதலையா?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக சிறை வட்டாரம் மூலம் தெரியவருகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முடிகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு நீதிமன்ற விதித்திருந்த அபராத தொகை ₹10 கோடியே 10 ஆயிரத்திற்கான நான்கு டி.டிகள் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் கடந்த வாரம் வக்கீல் பி.முத்துகுமார் தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் ஏற்றுகொண்டது.

அதை தொடர்ந்து, சசிகலா தரப்பு வக்கீல்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அதன்படி அவர் இன்னும் 84 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். இதனிடையில் சொத்து குவிப்பு வழக்கு கடந்த 1996ம் ஆண்டு தொடரப்பட்டபோது, இவ்வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடந்த 1996 டிசம்பர் 7ம் தேதி சசிகலாவை கைது செய்தனர். 26 நாட்களுக்கு பின் 1997 ஜனவரி 3ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பின்னர் இவ்வழக்கை விசாரணை நடத்திய பெங்களூரு தனிநீதிமன்றம் 2014 செப்டம்பர் 27ம் தேதி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியபின் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் 22 நாட்களுக்கு பின் அக்டோபர் 18ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு 26 நாட்களும் கடந்த 2014ம் ஆண்டு 22 நாட்கள் என 48 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். தண்டனை காலத்தில் அவர் ஏற்கனவே அனுபவித்த 48 நாட்கள் சிறை தண்டனை கழிக்கப்பட்டால் இன்னும் 18 நாட்களில் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளது.

இதை அடிப்படையாக வைத்தும், கர்நாடக சிறை விதிமுறைகள் படி சிறை கண்காணிபாளருக்கு முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் உள்ளதை பயன்படுத்தி இதற்கு முன் பல தண்டனை கைதிகள் விடுதலை செய்துள்ள முன்னுதாரணம் இருப்பதால், அதை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரியவருகிறது. வக்கீல்கள் கொடுத்துள்ள மனுவை பரிசீலனை செய்துவரும் சிறை நிர்வாகம், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் விடுதலை செய்வதற்கு வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரியவருகிறது.

* அபராத தொகையை செலுத்திய இளவரசி

சொத்து குவிப்பு வழக்கில் 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் இளவரசி செலுத்த வேண்டிய அபராத தொகையை செலுத்த அனுமதிக்கும்படி அவரது வக்கீல் அசோகன், கடந்த 20ம் தேதி தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று பரிசீலனை செய்த நீதிபதி, அபராதம் செலுத்த அனுமதி வழங்கினார், அதை தொடர்ந்து 6 வங்கி வரைவோலைகள் மூலம் ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான அபராத தொகையை வக்கீல் அசோகன் செலுத்தினார். அபராத தொகையை அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள் பெயரில் டி.டியாக எடுக்கப்பட்டிருந்தது. அதை நீதிபதி ஏற்றுகொண்டார். அபராதம் செலுத்தும்போது வக்கீல்கள மூர்த்திராவ் மற்றும் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: