டெல்லி உட்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் நுழைய புதிய கட்டுப்பாடு விதிப்பு

மும்பை: நாட்டில் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், டெல்லி, கோவா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக மகாராஷ்டிரா வருபவர்களுக்கான புதிய கட்டுப்பாட்டு விதிகளை இம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. அதன்படி, விமானங்களில் பயணிப்பவர்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து நெகடிவ் அறிக்கை உடன் வர வேண்டும்.

அதே போல், கோவா, குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் இருந்து புறப்படும் அல்லது அங்குள்ள ரயில் நிலையங்கள் வழியாக மகாராஷ்டிரா வரும் பயணிகள் கோவிட்-19 அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சாலை வழியில் பயணிப்பவர்களுக்கும் இது பொருந்தும். இந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத பயணிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், மாநில கோவிட் கேர் சென்டருக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதற்காகும் செலவை பயணிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: