எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பிச்சை எடுத்த திருநங்கை: உதவி செய்த போலீசார்

மதுரை: எம்பிபிஎஸ் முடித்த திருநங்கை மருத்துவ சேவையாற்ற வாய்ப்பு கிடைக்காமல் பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். மதுரை போலீசாரின் நடவடிக்கையால் தற்போது அவர் மருத்துவ சேவை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மதுரை திலகர்திடல் காவல்நிலைய பகுதியில் 25 வயதுடைய திருநங்கை ஒருவர் தனியாக சுற்றித்திரிந்தார். அவரை அழைத்து இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்தத் திருநங்கை எம்பிபிஎஸ் படித்து டாக்டரானதாகவும், சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி உணவு, உடைக்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார், அவரது எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ்களைப் பெற்று சரிபார்த்ததில், அவர் டாக்டருக்கு படித்தது உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களின் ஆலோசனை பெற்று, திருநங்கைக்கு மருத்துவ தொழில் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கவிதா கூறும்போது, ‘‘திலகர்திடல் பகுதியைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த திருநங்கை, மதுரை மருத்துவக்கல்லூரியில் 2018ல் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளார்.

கடந்த வருடம் முழுமையாக திருநங்கையாக மாறியவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். திருநங்கையாக இருப்பதால் மருத்துவமனையிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வீதியில் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். சிறுவயதில் இருந்தே திருநங்கையாக வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக கடந்த வருடம் வீட்டை வீட்டு வெளியே வந்துள்ளார். இவரின் சான்றிதழை வைத்து டாக்டர் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இவருக்கு பணி கிடைக்க கலெக்டர் உதவினால் அவரின் வாழ்க்கைத்தரம் உயரும்’’ என்றார்.

Related Stories: