வாடிப்பட்டியில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நீதிமன்ற கட்டிடம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்துக்கிடப்பதால் நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின் போது துவங்கப்பட்டன. அன்று முதல் தற்போது வரை நீதிமன்றம் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.  போதிய வசதி இல்லாததால் நீதிமன்றத்திற்கு வரும் பல தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.  

எனவே நீதிமன்றத்திற்கென சொந்த கட்டிடம் வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடந்து வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் மற்றும் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே 2.41 ஏக்கரில் ரூ.7.56 கோடியில் நீதிமன்ற கட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற அறை, அலுவலகம், வழக்கறிஞர்கள் அறை மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணி முழுவதும் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டிடம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து வாடிப்பட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளார் தியாகராஜன் கூறுகையில், ‘காஞ்சிபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடங்கள் ஆனலைன் மூலமாக திறக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி நீதிமன்றம் கட்டிடம் மட்டும் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்போது வரை தனியார் வாடகை கட்டிடத்தில் தான் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதனால் வழக்கறிஞர்களாகிய நாங்களும் பல்வேறு பணிகளுக்காக நீதிமன்றம் வருகை தரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம். எனவே கட்டி பல மாதங்களாக திறப்பு விழா காணமல் உள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்தை திறந்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Related Stories: