மூத்த குடிமக்கள் தபால் ஓட்டுமுறை எதிர்த்து திமுக நீதிமன்றம் செல்லும்: வேலூரில் துரைமுருகன் பேட்டி

வேலூர்: வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டதிலும், கூட்டணி பேசியதிலும் திமுகவுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி எதிர்க்கட்சிகளை குறிப்பாக திமுகவை ஏகவசனத்தில் வசைபாடி சென்றுள்ளார். இதனை திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை பற்றி பேசியிருக்கிறார். ஓபிஎஸ், ஜெயக்குமார் மகன்கள் எம்பியாக இல்லையா? எல்லா மாநிலங்களிலும், தேசிய அளவிலும் வாரிசு அரசியல் உள்ளது. அதேபோல் ஊழலை பற்றி பேசுவதற்கு முன்னால் அமித்ஷா விழா மேடையில் ஊழலுக்காக தண்டனை பெற்று சிறை சென்ற ஜெயலலிதா படத்துக்கு மலர்களை தூவினார். கொரோனா மருந்து வாங்கியதில் ஊழல் என்று கோர்ட்டில் சந்தி சிரித்தது. பாரத் நெட் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி டெண்டர் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் ராஜினாமா செய்துள்ளார்.

பாஜ சாதனை செய்திருப்பதாக கூறி மேடைக்கு விவாதத்துக்கு வரத்தயாரா என்கிறார். பல்வேறு விஷயங்களில் அமித்ஷா விவாதத்திற்கு வந்தால் நேரடியாக விவாதிக்க தயார். 2ஜி வழக்கு குறித்து பேசும் முன்பு அமித்ஷா பேப்பரை படிக்க வேண்டும். அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அதோடு திமுகவை மிரட்டுவது போல் சொல்லியிருக்கிறார். ஒருவரை குறைசொல்லும்போது குடும்பத்தை திரும்பி பார்க்க வேண்டும் என்கிறார்.திமுகவை கிள்ளுக்கீரையாக உள்துறை அமைச்சர் கருதினால் ஏமாந்து போவார். கருணாநிதி இல்லை என்று நினைத்தால் அது தவறு. கருணாநிதியை விட மிகப்பெரிய வெற்றியை ஸ்டாலின் பெறுவார். மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக திமுக நீதிமன்றம் செல்லும். இந்த நடைமுறையை வைத்துதான் பீகாரில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

Related Stories: