தொடர் மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது பாபநாசம் அணை மூடப்பட்டது: தாமிரபரணி ஆற்றில் சீற்றம் தணிந்தது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாபநாசம் அணை மூடப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறைந்ததால் தாமிரபரணி  ஆற்றில் வெள்ளம் சற்று தணிந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. நெல்ைல மாவட்டத்திலும்,  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை கொட்டியதால் அணைகள்,  குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில்,  கடனாநதி, ராமநதி ஆகிய அணைகள் நிரம்பியதால் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில்  திறந்து விடப்பட்டது.

இத்துடன் காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி  வரும் வெள்ள நீரும் கலந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு ஓடியது. கரையோர பகுதி  மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறையினரால்  அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மழை சற்று குறைந்தது. இதனால் தாமிரபரணி  ஆற்றில் வெள்ளம் தணிந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில்  வெயில் தலைகாட்டியது. எனினும் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. பாபநாசம்  அணையில் 121.90  அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 125 அடியானது. சேர்வலாறு அணையில் 140.68 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2  அடி உயர்ந்து 142.91 அடியானது.

இரு அணைகளுக்கும் விநாடிக்கு 2598 கன அடி  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் வெளியேறி வரும் நிலையில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பாபநாசம் அணை மூடப்பட்டது. பாபநாசம் அணையில் 3 மிமீ, சேர்வலாறு  அணையில் 6 மிமீ மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறு அணையில் 91.60 அடியாக  இருந்த நீர்மட்டம் மேலும் இரண்டு அடி உயர்ந்து  93.15 அடியானது.  அணைக்கு விநாடிக்கு 1493 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில்  இருந்து விநாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைப்பகுதியில் 1.6  மிமீ மழை பதிவாகி உள்ளது.  

நெல்லை மாவட்டத்தில்  பாளையங்கோட்டையில் 3 மிமீ மழையும், அம்பையில் 6  மிமீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகள், கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 நிரம்பி விட்டன. இதனால் கடனாநதி, ராமநதி அணைகளின் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணை மட்டுமே நிரம்ப வேண்டியுள்ளது.132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதிகளில் குண்டாறில் 5 மிமீ, அடவிநயினார் அணையில் 13 மிமீ மழையும், மாவட்டத்தில் ஆய்க்குடியில் 1.6 மிமீ, சங்கரன்கோவிலில் 9 மிமீ, சிவகிரியில் 11 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: