மகிழ்ச்சி பாடத்திட்டதால் மாணவர்கள் மேம்பட்ட மனிதர்களாக உருவெடுக்க முடியும்: மணீஷ் சிசோடியா பெருமிதம்

டெல்லி: மகிழ்ச்சி பாடத்திட்டதால் மாணவர்கள் மேம்பட்ட மனிதர்களாக உருவெடுக்க முடியும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் டெல்லி கல்வி அமைச்சரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சார்பில் ஹார்வர்டு கல்வித்துறை சர்வதேச கல்வி வாரம் நிகழ்ச்சி நடந்தது. முறையான சமூக உணர்வு கற்றல் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா இணைய வழியில் பங்கேற்று உரையாற்றினார். இதில் டெல்லி அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் மகிழ்ச்சி பாடத்திட்டம் குறித்து மணீஷ் சிசோடியா உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், மகிழ்ச்சி பாடத்திட்டம் என்பது அறநெறிகளை மாணவர்களுக்குப் போதிப்பதற்கான பாட வகுப்பல்ல. அன்றாட வாழ்க்கையில் நற்பண்புகளை, நன்னடத்தையைப் பின்பற்ற மாணவர்களின் மனநிலையை வளப்படுத்துவதற்கான முயற்சி இது. தங்களுடைய உணர்வுகளை அறிவியல்பூர்வமாக உற்றுநோக்கிப் புரிந்து செயல்பட மாணவர்களை மகிழ்ச்சி பாடத்திட்டம் தயார்படுத்துகிறது.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வெளி உலகை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். சரியாக சொல்வதானால் உணர்வுகளின் அறிவியல் பாடம் இது. ஏனெனில் மாணவர்கள் தங்களுடைய உணர்வுகளை அடையாளம் கண்டு புரிந்துகொள்ள தொடங்கிவிட்டால் அவர்களால் மேம்பட்ட மனிதர்களாக உருவெடுக்க முடியும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

Related Stories: