இந்தியாவில் 2 டோஸ் விலை 1000 ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி: சீரம் சிஇஓ தகவல்

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என சீரம் மருந்து நிறுவனத்தின் சிஇஓ அதார் பொன்னவாலா தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம், அஸ்டிரஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. உலகம் முழுவதும் இம்மருந்தின் இறுதிகட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பொன்னவாலா நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியானது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ஏப்ரலில் பொதுமக்களின் தேவைக்காக விற்பனைக்கு வரும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 டோஸ்கள் விலை ரூ.1000-க்கு விற்கப்படலாம்.

2024க்குள் இந்தியாவில் அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த தடுப்பூசி, வயதானவர்கள் மத்தியில் நல்ல பலனளிக்கிறது. இந்தியாவில் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுமையான பலனும் திறனும் இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3-ம் கட்ட மனித பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத்பயோடெக் உருவாக்கி வரும் இம்மருந்தை பரிசோதனைக்காக போட்டுக் கொள்ள அரியானா மாநில சுகாதாத்துறை அமைச்சர் விஜ் தன்னார்வலராக பதிவு செய்து கொண்டிருந்தார். அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி நேற்று போடப்பட்டது.

* கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலராக பதிவு செய்து கொண்ட அரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் அனி விஜ்ஜூக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி நேற்று போடப்பட்டது.

* இந்தியாவில் நேற்று கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக 45,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 90 லட்சத்து 4,365ஆக அதிகரித்துள்ளது.

* ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 1 லட்சத்து 32,162 ஆக அதிகரித்துள்ளது.

* குஜராத்,  மபி , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தபடி உள்ளது. இதனால், மபி மற்றும் குஜராத்தின் முக்கிய நகரங்களில் இன்று முதல் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

* கொரோனா சிகிச்சைக்கு ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து போதிய பயனை அளிக்காததால் அதனை தனது சிகிச்சை பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் நீக்கி உள்ளது.

Related Stories: