ராகி, நெல் அறுவடை துவங்கவுள்ள நிலையில் ஓசூர் வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்: விவசாயிகள் கவலை

ஓசூர்: கர்நாடக மாநில எல்லையையொட்டி தளி  வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு  முன்பு, 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. நேற்று முன்தினம்  ஊடேதுர்கம் பகுதிக்கு வந்த யானைகள், நேற்று அதிகாலை 30 யானைகள் ஓசூர்  வனப்பகுதிக்கு வந்தன. தற்போது ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ராகி,  நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் 30 யானைகள் ஓசூர்  வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து  விவசாயிகள் கூறுகையில், கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில்  இருந்து ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள், அக்டோபர் மற்றும் நவம்பர்  மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது  வழக்கமாகும். இந்த யானை கூட்டம் சுமார் 4 மாதங்கள் முகாமிட்டு, விவசாய  பயிர்களை  சேதப்படுத்தும். அதன்படி இந்தாண்டு 30  யானைகள் நேற்று ஓசூர்  வனப்பகுதிக்கு வந்துள்ளன. இந்த யானைகளை நிரந்தரமாக விரட்டிட வனத்துறையினர்  நவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதனிடையே சானமாவு வனப்பகுதியில்  முகாமிட்டுள்ள யானைகளின் நடமாட்டத்தை, வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு  பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்கள்  வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவும்  வேண்டாம். மேலும் இரவில் விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என  வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: