2 கோடி வரை கடன் சலுகை கிரிடிட் கார்டுக்கு பொருந்தாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி சலுகை, கிரிடிட் கார்டுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்ட போது, வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்துவதில் இருந்து மத்திய அரசு 6 மாத சலுகை வழங்கியது. ஆனால், இந்த 6 மாதங்களுக்கான வட்டிக்கு வட்டியை வங்கிகள் வசூலிக்கத் தொடங்கின. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, 6 மாதங்களுக்கு விதிக்கப்படும் வட்டிக்கு வட்டியை ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில், தற்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சலுகையை பயன்படுத்தாமல் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் இதை விசாரித்தனர்.  அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தத்தா, “கொரோனா காலத்தில் எங்கள் பிரச்னைக்கு உதவி செய்த மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்,’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அப்படி என்றால் வழக்கை முடித்து கொள்கிறீர்களா? ஆனால், மின் உற்பத்தியாளர்கள், சிறுகுறு உற்பத்தியாளர்கள் நிவாரணம் கோரியுள்ளனரே?’ என கூறினர்.  மத்திய அரசின் சார்பில் வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘தற்போது வழங்கப்பட்டுள்ள வட்டிக்கு வட்டி சலுகையில், பெரிய, சிறிய கடன் என்ற கணக்கு பாகுபாடு கிடையாது. ரூ.2 கோடிக்கு கடன்பட்டவர்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர்.

 இது, கொரோனா பாதிப்பில் இருந்தவர்களின் மன அழுத்தத்தை குறைத்துள்ளது,’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்ஆர்.ஷா, ‘‘காமாத் கமிட்டி என்பது பெரிய கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் தானா?’’ என்று கேட்டார்.

இதையடுத்து, மின் உறுபத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘எங்கள் தரப்பு கோரிக்கையையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மின் உற்பத்தி நிறுவனங்கள்  கடுமையாக பாதிப்படைந்து ரூ.1.2லட்சம் கோடி கடனில் உள்ளது. இப்பிரச்னையை ரிசர்வ் வங்கி சரி செய்யலாம். அதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது,’’ என்றார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மின் உற்பத்தியாளர் ேகட்டுள்ள சலுகைகள் தொடர்பாக, தங்களின் வாதங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எழுத்துப்பூர்வமாக நாளைக்குள் (இன்று) சமர்பிக்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ள ரூ.2 கோடி கடன் வரையிலான வட்டிக்கு வட்டி சலுகை கிரிடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது. இந்த கார்டு பயன்படுத்துபவர்களை நுகர்வோர் கடன் வகைகளில் சேர்க்க முடியாது,’’ என்று தெரிவித்து, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: