பீகாரில் வெற்றிகரமாக நடத்தி முடித்ததால் உற்சாகம் தமிழக சட்டப்பேரவைக்கு திட்டமிட்டப்படி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

புதுடெல்லி: ‘பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் மே-ஜூன் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும்,’ என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக கூறி உள்ளார்.கொரோனா பாதிப்புக்கிடையே பீகார் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட முதல் தேர்தல் என்பதால் பீகார் தேர்தலில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:பீகார் தேர்தலை நடத்த நாங்கள் தயாரான போது, தேவையின்றி ஆபத்தை தேடிச் செல்வதாக சிலர் விமர்சித்தனர். ஆனால், பாதுகாப்புடன், வெற்றிகரமாக மாபெரும் ஜனநாயக நடைமுறையை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம். ஒவ்வொரு தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் கடின உழைப்பை தந்து வருகிறது. இம்முறை கொரோனா தொற்றுநோய் சவாலையும் முறியடிக்க வேண்டியிருந்ததால் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டோம்.

பீகார் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததால் எங்களுக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது. இதே புத்துணர்ச்சியுடன் நாங்கள் ஓய்வு எடுக்கப் போவதில்லை. அடுத்தகட்டமாக நடத்தப்பட வேண்டிய  தேர்தல்களையும் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் நடத்தி முடிப்பதற்கான ஆயத்த பணிகளை இப்போதே தொடங்கி விட்டோம். எனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிய உள்ளது. அதற்குள்ளாக நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை நடத்தி முடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.பீகாரைத் தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: