தங்க நகையை பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையர்களை விரட்டியடித்த ‘சிங்கப்பெண்’

சாயல்குடி: சாயல்குடி அருகே நகையை பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையர்களை அடித்து துரத்திய பெண் அலுவலரை காவல்துறையினர் பாராட்டினர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கடுகுசந்தை முத்துராமலிங்கப்புரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரன் மனைவி சரண்யா. சாயல்குடி மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றுகிறார். சொந்த ஊரிலிருந்து அலுவலகம் மற்றும் கணக்கீடு செய்யும் கிராமங்களுக்கு டூவீலரில் செல்வது வழக்கம். நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சாயல்குடி அலுவலகத்திற்கு சென்றார். ஒப்பிலான் விலக்கு ரோடிலிருந்து ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

மலட்டாறு முக்குரோடு அருகே தனியார் எடை நிலையம் அருகே சரண்யாவை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை அறுக்க முயன்றனர். சரண்யா, மர்ம நபர்களுடன் சண்டை போட்டு, சங்கிலியை பறி கொடுக்காமல், விடாப்பிடியாக போராடியுள்ளார். அவ்வழியாக வந்த ஆட்டோவை பார்த்தவுடன் சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த மர்ம நபர்கள் தப்பித்து சென்றனர். இதுகுறித்து சரண்யா சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர். தனி ஒருவராக வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடிய சரண்யாவை காவல்துறையினர் பாராட்டினர். சரண்யாவிற்கு கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதால் சாயல்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Related Stories: