நான்கு அம்ச கோரிக்கை வலியுறுத்தி பாம்பனில் தடையை மீறி போராட்டம்

ராமேஸ்வரம்: மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பாம்பனில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் பாம்பனில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் கிழக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று பாம்பனில் இருந்து மண்டபம் வரை மீனவர் உரிமை மீட்டெடுப்பு கோரிக்கை நடைபயணம் துவங்க திட்டமிடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் பாம்பனில் இருந்து ராமநாதபுரம் கிழக்கு பகுதி தலைவர் நவ்வர்ஷா தலைமையில் நடைபயணம் துவங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். நடைபயணம் துவங்க இருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடைபயணம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர். தொடர்ந்து பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மீன்பிடி படகுகளுக்கு அரசு வழங்கிடும் மானிய டீசலை அதிகரித்து வழங்க வேண்டும். மீனவருக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம்முகைதீன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா, பாம்பன் நகர் தலைவர் நியாஸ்கான் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டது.

Related Stories: