நிதியின்றி முடங்கிய உள்ளாட்சி நிர்வாகம்: பஞ். தலைவர்கள்,கவுன்சிலர்கள் புகார்; சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, நயினார்கோயில், போகலூர், ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட 11 யூனியன்கள் உள்ளன. இதில் 17 மாவட்ட கவுன்சிலர்களும், 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும், 429 பஞ்சாயத்து தலைவர்களும் உள்ளனர். இவர்கள் பொறுப்பேற்று 10 மாதங்களாகியும் யூனியன் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய பொதுநிதி மற்றும் சிறப்பு நிதி, மானிய திட்ட நிதிகள் உள்ளிட்ட எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை.

இதனால் போதிய நிதியின்றி கிராமங்களில் முக்கியமான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை, பருவ மழைக்காலம் துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க போதிய நிதியில்லை. யூனியன், பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் கூறும்போது, பதவியேற்று 10 மாதங்களாகியும் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் உரிய நிதி மற்றும் சிறப்பு மானிய திட்ட நிதி போன்றவற்றை மத்திய,மாநில அரசுகள் வழங்கவில்லை.

கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று காரணமாக பல நடவடிக்கைகளுக்கு செலவு செய்தும், அதற்கு அரசு வழங்கிய சொற்ப நிதி போதுமானதாக இல்லை. தற்போது வரை சில பஞ்சாயத்துகளில் சொற்ப நிதியே இருக்கிறது. இதனை கொண்டு கிராமங்களில் அவசியமான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செலவு செய்வதற்கு நிதி ஆதாரம் இன்றி, கிராமங்களில் அடிப்படை வசதிகள் முடங்கி வருகிறது. கிராமங்களில் தண்ணீர் விநியோகம் செய்வது, குடிநீர் தொட்டி பராமரித்தல், சாலை, தெருவிளக்கு, பொதுசுகாதாரம் பராமரிப்பு, கழிவுநீர், குப்பைகளை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், குளோரின் மருந்துகளை தெளித்தல் உள்ளிட்ட அவசியமான பணிகளுக்கு கை காசை போட்டு செலவு செய்யும் நிலை உள்ளது. மேலும் கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற சிறுசிறு வேலைகள் செய்யக்கூட, பஞ்சாயத்து நிர்வாகத்தில் போதிய நிதியின்றி, செலவு செய்ய முடியாமல் கிராமங்களில் அடிப்படை வசதிகள் முடங்கி வருகிறது.

தற்போது பருவ மழைக்காலம் துவங்கிய நிலையில் சாலை, தெருகளில் தண்ணீர் தேங்கினால் அகற்றும் நடவடிக்கை செய்தல், கொசு மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கூட போதிய நிதி இல்லை. எனவே பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையுடன், கூடுதலாக போதிய நிதியை வழங்க வேண்டும் என கூறினர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூறும்போது, குறைந்தது இரண்டிற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் மக்கள் பிரதிநிதியாக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளோம். இதனால் கிராமத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், முக்கியமான திட்டப்பணிகளை பொதுமக்கள் கேட்கின்றனர். இது குறித்து யூனியன் நிர்வாகத்திடம் கேட்டால், பொது நிதி இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் கிராமங்களில் அடிப்படை வசதிகள் முடங்கி கிடக்கிறது.

* பெரும் பாதிப்பு

யூனியன் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆவணம் எழுத்தர், உதவியாளர்கள், டிரைவர்கள், தட்டச்சு, கணினி உதவியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பொதுநிதியிலிருந்து சம்பளம் வழங்கப்படுகிறது, இதனை போன்று மின்கட்டணம், டீசல், கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிசின் போன்ற எலக்ட்ரானிக் மிசின் உள்ளிட்ட அலுவலகம் பராமரிப்பு, தளவாட பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவற்றிற்கு பொதுநிதி மற்றும் மாநில நிதிகுழு மானிய நிதி மூலம் பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 10 மாதங்களாக எவ்வித நிதியும் வராததால் நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. இதனால் சம்பளம் வழங்க முடியாமல் காலம் தாழ்ந்து வருவதால் ஊழியர்கள் தீபாவளி கொண்டாட முடியாத பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர். மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம், பேரிடர் இழப்புகள் வந்தால் கூட செலவு செய்ய பணம் இன்றி பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Stories: