நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் மணல் முறைகேடு புகார் உயர்நீதிமன்ற கமிஷன் குழு அதிரடி ஆய்வு: ரூ.32 கோடிக்கு விற்கப்பட்டதா?

நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியின்போது கிடைத்த ஆற்று மணலை முறைகேடாக விற்றது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கமிஷன் நெல்லையில் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தது.நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையம் 1956ம் ஆண்டு 4.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 60 ஆண்டுகள் பழமையான இந்த பஸ்நிலையத்தை இடித்து விட்டு தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் அடுக்குமாடி பஸ் நிலையம் அமைத்திட திட்டமிடப்பட்டது. தரை தளத்தில் 1629 இரு சக்கர வாகனங்கள், 106 நான்கு சக்கர வாகனங்கள், 27 பஸ்கள் நிறுத்தும் வசதி, 30 கடைகள், 4 லிப்ட்கள், 2 நகரும் படிக்கட்டுகள், முதல் தளத்தில் 82 கடைகள், இரண்டாம், மூன்றாம் தளத்தில் தலா 16 கடைகள் என சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடடப்பட்டது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.78.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 2018ம் ஆண்டு பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு பணி தொடங்கியது. 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அஸ்திவாரம் அமைக்க 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. பேருந்து நிலையம் அருகே தாமிரபரணி ஆறு செல்வதால் தோண்டப்பட்ட  30 அடி பள்ளத்தில் சுத்தமான ஆற்று மணல் இருந்துள்ளது. மேலும் ஆற்ற நீர் ஊற்றும் ஏற்பட்டது. இந்த ஆற்று மணலை நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக ஏலம் விட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் நெல்லையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர் பழனி வேலாயுதம் மூலம் புகார் மனு அளித்தார். இது வழக்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த 4ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கலைவாணன் என்பவரை சிறப்பு விசாரணை கமிஷனாக நியமித்து உத்தரவிட்டது. இந்த கமிஷன் குழு நேற்று காலை 9 மணிக்கு சந்திப்பு பஸ் நிலையம் வந்தனர். பஸ் நிலையம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கொட்டும் மழையில் சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் கண்ணன், ஸ்மார்ட் சிட்டி திட்ட சிறப்பு அதிகாரி நாராயணன் நாயர், உதவி ஆணையர் அய்யப்பன், செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, லெனின், வக்கீல்கள் ஆயிரம் செல்வகுமார், பழனி வேலாயுதம், புகார்தாரர் முன்னாள் கவுன்சிலர் சுடலைகண்ணு உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

இதுகுறித்து ஆய்வு கமிஷன் அதிகாரி கலைவாணன் கூறுகையில், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு நடைபெறும். பஸ் நிலையத்தை சுற்றி 4 பகுதியிலும் ஆழ்துளை போட்டு மணலின் ஒவ்வொரு லேயர் நிலையும் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும். இவற்றில் இருப்பது ஆற்று மணல் மட்டும் தானா அல்லது வேறு மணல் வகை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதுகுறித்து மனுதாரர் சுடலைக்கண்ணு கூறுகையில், அஸ்திவாரம் தோண்டப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட ஆற்று மணலின் நிலை குறித்து உண்மை தன்மை அறிய நான் இந்த வழக்கை பதிவு செய்துள்ளேன். சுமார் 9 ஆயிரம் லோடு மணல் இங்கிருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் ரூ.8 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக முதலில் புகார் தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது ரூ.32 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் என்றார்.

Related Stories: