தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்ட 14,500 டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

பாலக்காடு: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 7500 டெட்டனேட்டர், 7000 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சரக்கு லாரிகளில் வெடிபொருட்கள், கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக- கேரள எல்லையில் உள்ள வாளையாரில் கேரளாவிற்குள் நுழைகின்ற வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாளையார் எஸ்.ஐ. வினு தலைமையில் போலீசார் வாளையார் அருகே நேற்று முன்தினம் வாகன பரிசோதனை நடத்தினர்.

அப்போது சேலத்திலிருந்து தக்காளி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு வேனை தடுத்து போலீசார் சோதனையிட்டனர். இதில் 7500 டெட்டனேட்டர், 7000 ெஜலட்டின் குச்சிகளை தக்காளிப்பெட்டிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெடிப்பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என தெரிந்தது. இதையடுத்து மினி சரக்கு வேனை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா, தம்மாப்பேட்டையைச் சேர்ந்த ரவி (38), திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கோட்டாவூரைச் சேர்ந்த பிரபு (30) ஆகியோரை வாளையார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சேலத்திலிருந்து அங்கமாலிக்கு வெடிபொருட்களை அவர்கள் கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: