போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு: பெங்களூருவில் 4 பேர் அதிரடி கைது

பெங்களூரு: சர்க்கரை கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்காக போலி ஜிஎஸ்டி கணக்கு தயாரித்து, ரூ.1,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர், பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பதிவு  செய்யப்பட்ட நிறுவனங்களின் வரவு - செலவு கணக்குகளை  ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் பரிசீலனை செய்தபோது, அதில் அதிகளவில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி  பெங்களூரு குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை  நடத்தி இந்த முறைகேடுகளுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கமலேஷ் மிஸ்ரா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.1000 கோடிக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, கமலேஷ் மிஸ்ராவின் கூட்டாளிகள் மூன்று  பேரை போலீசார் கைது  செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு புதிதாக தொடங்கப்பட்ட சில கம்பெனிகளின் வரவு - செலவு கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் சர்க்கரை கம்பெனிகள் உள்ளிட்ட  25க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் ஜிஎஸ்டி எண்களை ஆய்வு செய்தோம். அப்போது, இந்த  மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. போலி கம்பெனிகள் திறக்கப்பட்டு அந்த கம்பெனி பெயரில் ஜிஎஸ்டி எண்ள் பெறப்பட்டுள்ளது. பிறகு அந்த ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி, மோசடி கம்பெனி பெயரில் வங்கிகளில் கடன்கள் பெறப்பட்டுள்ளது.இதற்காக தனக்கு தெரிந்த நபர்களின் ஆதார் கார்டு, பான் கார்டுகளை பெற்றுக்கொண்ட  கமலேஷ்,  அவர்கள் பெயரில் போலி கம்பெனிகளை உருவாக்கியுள்ளார். அதன்பிறகு திட்டமிட்டப்படி பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் பெறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் முதற்கட்டமாக நடத்திய சோதனையில் கமலேஷ் மிஸ்ரா பெயரில் மும்பை ,டெல்லி உள்பட வெவ்வேறு இடங்களில் 23 போலி கம்பெனிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

இதுதவிர சர்க்கரை கம்பெனிகள், சீனா உள்பட சில  வெளிநாட்டு கம்பெனிகள் பெயரிலும் போலி கம்பெனிகள் உருவாக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இதன் மூலம், மொத்த மதிப்பு ரூ.1000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.வங்கி கடன் பெறுவது இவர்களின் முதல் நோக்கமாகவும்,  அதன் பிறகு வங்கி கடனை  செலுத்தாமல் மோசடி செய்வது போன்ற குற்றங்களில் கமலேஷ் மிஸ்ராவும், அவருடைய கூட்டாளிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு உதவிய அதிகாரிகள் யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை  நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: