பொதுத்துறை நிறுவனங்களிடம் அதிக லாபம், டிவிடெண்ட் கேட்டு மத்திய அரசு மீண்டும் நிர்ப்பந்தம்: செலவை சமாளிக்க நிதி திரட்ட நெருக்கடி

புதுடெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒரு முறை டிவிடெண்ட் வழங்க வேண்டும் எனவும், லாபத்தில் அதிகபட்ச பங்கை தர வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. வரி வருவாய் சரிந்ததால், பெட்ரோல், டீசல், மதுபான கலால் வரிகள் உயர்த்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் பெட்ரோல், டீசல் வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதுபோல், ஜிஎஸ்டி வருவாய் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போதுதான் மத்திய அரசின் இலக்கான ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. வரி வசூல் இல்லை என்பதை காரணம் காட்டித்தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தராமல் கைவிரித்தது.

 பொருளாதார மந்த நிலையில் இருந்து விரைவில் முழுமையாக மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில், செலவினங்களும் அதிகரித்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் இன்னும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன. இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களிடம் கூடுதலாக லாப தொகை கேட்டும், டிவிடெண்டை விடுவிக்கவும் மத்திய அரசு நெருக்கடி தர துவங்கியுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக, அதிக டிவிடெண்ட் வழங்கும் பெரிய நிறுவனங்கள், இடைக்கால டிவிடெண்டாக ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் விடுவிக்க வேண்டும். அதாவது, காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உடனே டிவிடெண்ட் தொகையை கணக்கிட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிற பொதுத்துறை நிறுவனங்கள் அரையாண்டுக்கு ஒரு முறையாவது டிவிடெண்ட் தொகையை விடுவிக்க வேண்டும் என முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக துறையிடம் இருந்து சுற்றறிக்கையாக வந்துள்ளதாக, பொதுத்துறை நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.  

இதுபோல், ஆண்டு டிவிடெண்ட் எவ்வளவு வரும் என்ற உத்தேச கணக்கீட்டில், குறைந்த பட்சம் 90 சதவீத தொகையையாவது ஒன்று அல்லது அற்கு மேற்பட்ட தவணைகளில் இடைக்கால டிவிடெண்டாக வழங்க அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் பரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. தற்போது, ஒரு துறையில் 4 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மிகாமல் இருக்க கொள்கை முடிவும் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க அதிக டிவிடெண்ட் கோருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழிகாட்டு நெறி கிடக்கட்டும் ‘வரவு’ எவ்வளவு கிடைக்கும்?

பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்த பட்ச டிவிடெண்ட் தொகையை மட்டும் வழங்குகின்றன. வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் இது கணக்கிட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், இப்படி வழிகாட்டு நெறிமுறைகளின் படி மட்டுமே வழங்க வேண்டும் என அல்லாமல், முடிந்த வரை அதிக டிவிடெண்ட் வழங்க பொதுத்துறை நிறுவனங்கள் முன்வரவேண்டும். லாபம், மூலதன தேவைகள், ரொக்க இருப்பு, நிகர மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கணக்கிட்டு பங்களிப்பை தர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக பொதுத்துறை நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மத்திய அரசுக்கு வரி வசூல் 4.6 லட்சம் கோடி முந்தைய ஆண்டை விட குறைவு 32.6%

கிள்ளித் தராதீங்க...அள்ளிக் கொடுங்க

* அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் நிகர மதிப்பில் 5 சதவீதம் அல்லது லாபத்தில் 30 சதவீதத்தை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்குகின்றன.

* வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்தான் டிவிடெண்ட் தொகையை மத்திய அரசுக்கு நிறுவனங்கள் வழங்கும்.

* தற்போது இந்த டிவிடெண்ட் தொகையை காலாண்டுக்கு ஒரு முறை வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

* அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் காலாண்டிலும், பிற நிறுவனங்கள் அரையாண்டிலும் டிவிடெண்ட் வழங்க கோரியுள்ளது.

Related Stories: