பைனான்சியரை குடும்பத்துடன் சுட்டுக்கொன்றதன் பின்னணி என்ன? போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் பரபரப்பு தகவல்

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியர் உட்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பைனான்ஸ்சியர் தலில் சந்த் (74). கடந்த புதன்கிழமை மாலை தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பைனான்சியர் உட்பட 3 பேரை சுட்டுக்கொன்றது அவரது மருமகள் ஜெயமாலா என தெரியவந்தது.

குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காரில் தப்பி சென்ற 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பைனான்சியர் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் மூன்று குற்றவாளிகளை நேற்று முன்தினம் இரவு மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் கைது செய்துள்ளோம். ஷீத்தல் சந்த், அவரது மனைவிக்கு குடும்ப பிரச்னை இருந்தது. அதுபற்றி புனே போலீசில் புகார் கொடுத்து இருந்தார்கள்.

வியாழன் அதிகாலை 6.30 மணிக்கு விமானம் மூலம் இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் 5 பேர் புனேவுக்கு சென்றனர். அங்கு புனே போலீசாருடன் இணைந்து குற்றவாளிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது குற்றவாளிகள் சோலாப்பூரில் இருப்பது தெரியவந்தது. உடனே புனேவில் இருந்து தனிப்படையினர் சோலாப்பூருக்கு சென்றனர். தனிப்படையினரிடம் குற்றவாளிகள் சென்ற காரின் பதிவு எண் (UP16AH-8340) இருந்ததால் சாலை மார்கமாக குற்றவாளிகளின் காரை கண்காணித்தனர். அப்போது குற்றவாளிகள் சென்ற காரைப் பார்த்த தனிப்படையினர் உடனே யூ-டர்ன் எடுத்து குற்றவாளிகளின் காரை பின்தொடர்ந்தனர்.

தங்களை போலீசார் பின் தொடர்வதை தெரிந்துகொண்ட குற்றவாளிகள் காரில் வேகமாக சென்றனர். ஆனால் தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு காரை மடக்கி 3 குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புனேவை சேர்ந்த கைலாஷ்(32). அவர் ஷீத்தல் சந்த் மைத்துனர் ஆவார். உடன் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்தரநாத் கர்(25), உத்தம் கமல்(28) என தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தலைமறைவாக உள்ள 3 ஷீத்தல் சந்த் மனைவி ஜெயமாலா மற்றும் கைலாஷ் நண்பர்களான விலாஸ் ஜாலிண்டர் பக்ஹர் மற்றும் ராஜிவ் ஷிண்டே ஆகிய மூன்று குற்றவாளிகளை பிடிக்க கூடுதலாக மற்றொரு தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த 3 குற்றவாளிகளை பிடிக்க ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்தோம். குற்றவாளிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு செல்ல வாய்ப்பு இருந்ததால் ஆந்திரா போலீசாருக்கு வாகன எண்களுடன் தகவல் கொடுத்தோம். மேலும், குற்றவாளிகள் புனே என்பதால் புனே போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளோம்.

ஆனால் குற்றவாளிகள் சோலாப்பூரில் இருந்ததால் சோலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து குற்றவாளிகள் 3 பேரை உடனே கைது செய்தோம். கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளை சென்னைக்கு தனிப்படையினர் அழைத்து வருகின்றனர்.

இந்த கொலையில் 3 உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். கைலாஷின் நண்பர்கள் 3 பேர் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி தமிழ்நாட்டில் வாங்கியது கிடையாது. கொலை செய்ய வரும்போதே கொண்டு வந்துள்ளனர். கைலாஷ் மீது சில வழக்குகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குடும்ப பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் புகார் கொடுத்துள்ளனர். இரண்டாவதாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு 4 பேர் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததாக யானைகவுனி காவல் நிலையத்தில் பைனான்சியர் தரப்பில் புகார் கொடுத்துள்ளனர். வந்தவர்கள் யார் என்று தெரியாது. விசாரணையில், வீட்டிற்கு வந்த ஆட்டோ பதிவு எண்ணை வைத்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காணாமல் போன நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். 3 பேர் மீதும் 5 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இது திட்டமிட்ட படுகொலைதான். அதனால்தான் அவர்கள் துப்பாக்கி கொண்டு வந்துள்ளனர். ஜெயமாலா சென்னையில் இருந்து புனே சென்ற போது இரண்டு மூன்று பஞ்சாயத்து நடந்துள்ளது. ‘.32’ வகை குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.

Related Stories: