ரேஷன்கடை துவக்க விழாவில் தகராறு கூட்டத்தில் பொதுமக்களை மிரட்டிய அதிமுக பிரமுகர்: அதிகாரிகள் அதிர்ச்சி; திருவாலங்காட்டில் பரபரப்பு

திருத்தணி: ரேஷன்கடை துவக்க விழாவில் அதிமுக பிரமுகர், பொதுமக்களைமிரட்டினார். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் காவிரி ராஜபுரம் கிராமத்துக்கு உட்பட்ட பங்காரு பள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக நகரும் ரேஷன்கடை துவக்க விழா நேற்று நடந்தது. இதனை, திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் நேற்று துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. கவேரி ராஜபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அப்போது, திருவாலங்காடு ஒன்றிய அதிமுக செயலாளர் சக்திவேல், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை, அக்கட்சியை சேர்ந்த நானே துவக்கி வைப்பேன்  என்று கூறி அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்க முயன்றார்.

ஆனால் அங்கிருந்த மக்கள், ‘‘எம்எல்ஏவின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் பொறுமையாக இருங்கள்’’ என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், பொது மக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ரேஷன்கடை அலுவலரை பணியிட மாற்றம் செய்துவிடுவேன் எனவும் எச்சரித்ததாக தெரிகிறது. இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அங்குவந்த எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், எங்களது ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை, நீங்கள் ஏன் துவக்கி வைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இந்த தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ நான். அரசின் திட்டங்களை துவக்கி வைக்கும் அதிகாரம் எனக்குத்தான் இருக்கிறது என கூறினார்.

மேலும், அங்கிருந்த திமுகவினரும், பொதுமக்களும் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், ரேஷன்கடையை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபாரதி, ஊராட்சி தலைவர்கள் அருள் முருகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: