வேலூர் சத்துவாச்சாரி - காங்கேயநல்லூர் செல்லும் பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் மருத்துவக்கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு-மாசுகட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரி- காங்கேயநல்லூர் செல்லும் பாலாற்றில் மருத்துவக்கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டு வருவதை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பாலாறு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. இன்றைக்கு சுற்றுச்சூழல் சீரழிவால் பாழ்பட்டு உள்ளது. மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

மணல் கொள்ளையால் பாலாற்றில் பல இடங்களில் முட்செடிகள் முளைத்து காடு போல் வளர்ந்துள்ளன. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய பாலாற்றில் காலப்போக்கில் நீர்வரத்து குறைந்தது. ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயனக் கழிவுகள், மணல் கொள்ளை என பலமுனை தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இன்றைக்கு அழிவின் பிடியில் பாலாறு சிக்கித் திணறுகிறது.

இந்நிலையில் வேலூர் மாநகரின் பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் நாள்தோறும் பாலாற்றில் கொட்டப்படுகிறது.குறிப்பாக வேலூர் மாநகரகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் நடத்தி வரும் சிலர் தங்களிடம் உள்ள மருத்துவக்கழிவுகளை பாலாற்றில் கொட்டி எரித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து காங்கேயநல்லூருக்கு செல்லும் பாலாற்றில் குவியல் குவியலாக மருத்துவக்கழிவுகளை சமூக விரோதிகள் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. அதேபோல் காற்று மாசுபாடு உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.

 எனவே பாலாறு சீரழிவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலாற்றில் மருத்துவக்கழிவுகள் கொட்டும் நபர்களுக்கு அதிகளவு அபராதம், தண்டனை விதிக்காமல் மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: