டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது!: போட்டி அமைப்பாளர் அறிவிப்பு

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடப்பாண்டு நடைபெறவிருந்தது. கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 வைரஸ் உலக நாட்கள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் வீரர்களின் பாதுகாப்புக் கருதி ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.  அடுத்த ஆண்டு ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர், வீராங்கனைகள் ஜப்பானுக்கு வந்த பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் போட்டிகளை காண பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜப்பானில்  அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நீர் விளையாட்டு அரங்கமொன்று  திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: